தமிழ்த் திரைப் பாடலாசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆன உடுமலை நாராயணகவி என்கிற நாராயணசாமி விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர். முத்துசாமிக்கவிராயரின் மாணவர்; ஆரம்ப காலத்தில் நாடகங்களுக்கு பாடல் எழுதினார். இவருடைய பாட்டுகள் நாட்டுப்புற இயலின் எளிமையையும், தமிழ் இலக்கியச் செழுமையையும் கொண்டிருந்தன. 1933-ல் திரைப்படங்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்தவர். நாராயணகவி என்று பெயர் சூட்டிக்கொண்டு கவிஞர் இனமென்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர்.
ஆரம்பத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய நாராயணகவி, மகாகவி பாரதியாரின் நட்புக்குப்பின் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதி அதன் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பினார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு `கிந்தனார்’ கதாகாலட்சேபம் எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கியவர். அறிஞர் அண்ணா எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி போன்ற படங்களுக்கும் கலைஞர் கருணாநிதி கதை வசனம் எழுதிய பராசக்தி, மனோகரா திரைப்படங்களுக்கும், பிரபாவதி, காவேரி, சொர்க்கவாசல், தூக்குத்தூக்கி, தெய்வப்பிறவி, மாங்கல்யபாக்கியம், சித்தி, எங்கள் வீட்டு மகாலட்சுமி, ரத்தக் கண்ணீர், ஆதிபராசக்தி, தேவதாஸ் போன்ற படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர்.ஏறத்தாழ பத்தாயிரம் பாடல்களை எழுதியுள்ள நாராயணகவி இயல்பாகவே இனிமையான சுபாவம் கொண்டவர். நேர்மையும், சொல்திறமையும் மிக்கவர். எவ்வகையிலும் தலை வணங்காத உறுதி உடையவர். பிறருக்கு உதவுகின்ற மனம் படைத்தவர். திரையுலகில் தமக்கென ஒரு மதிப்பையும் புகழையும் வைத்திருந்தவர்.
மதுரையில் நாராயணசாமி பல நாடகங்களுக்கு உரையாடல்களும் பாடல்களும் எழுதினார். அதே சமயத்தில் தேசத்தில் சுதந்திர வேள்வித்தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியிருந்தது. தன் பங்காக ஏராளமான தேசிய உணர்வுப் பாடல்களை எழுதி அன்றைய மேடைகள் தோறும் முழங்க வைத்தார். கவிராயரின் பாடல்கள் மக்கள் மனங்களை ஈர்த்து அவர்களின் உள்ளங்களில் தனியிடத்தைப் பெற்றன. ‘கலைமாமணி’ என்னும் பட்டம் பெற்றார். தமிழும் இசையும் உள்ளவரை சாகாவரம் பெற்ற பாடல்களைஎழுதிய உடுமலை நாராயணகவி தம் 82வது வயதில், மறைந்தார். இந்திய அரசு உடுமலை நாராயணகவி நினைவை போற்றும் வகையில் 31.12.2008 இல் இந்திய அஞ்சல் துறை அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது.
==பெரணமல்லூர் சேகரன்==